தமிழ்நாடு (Tamil Nadu)

கவரைப்பேட்டை ரெயில் விபத்து... மேலும் 10 பேரை விசாரிக்க 'சம்மன்'

Published On 2024-10-18 06:58 GMT   |   Update On 2024-10-18 06:58 GMT
  • ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
  • விபத்தின்போது பணியில் இருந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை:

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த 11-ந்தேதி இரவு 8.30 மணியளவில் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்தன. அதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள தண்டவாளத்தில் நட்டுகள் கழன்று கிடந்தன. ரெயில் தண்டவாளங்களை இணைக்கும் 'டி' வடிவ கம்பி இணைப்பு தளர்வாகவும், சில இடங்களில் இணைப்பு இடம் மாறி இருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நட்டுகளில் சுத்தியலால் அடித்த தடங்கள் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். மேலும், ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படைகளை அமைத்தும் விசாரணை நடத்தினார்கள். விபத்தின்போது பணியில் இருந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரெயில் லூப் பாதையில் சென்று விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில், விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

ரெயில் விபத்து குறித்து, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரெயில் பாதுகாவலர், பயணச்சீட்டு பரிசோதகர், ஏ.சி. பெட்டி பணியாளர்கள், அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளை சேர்ந்த 30 ரெயில்வே அலுவலர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.


சென்ட்ரலில் உள்ள சென்னை ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் 15 பேரிடமும், 2-ம் கட்டமாக நேற்று மீதமுள்ள 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் ரெயில் விபத்துக்கான காரணம், ரெயிலின் இயக்கம், சிக்னல், இன்டர்லாக்கிங் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் தண்டவாள பராமரிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணையில் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி பாலமுரளி உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் எழுத்து பூர்வமாக பதிவு செய்யப்பட்டன. இந்த 2 நாள் விசாரணை நேற்று இரவு நிறைவடைந்தது. விசாரணை அறிக்கை 15 நாட்களில் தயார் செய்யப்பட்டு, இந்திய ரெயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பேரில், ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ரெயில்வே ஊழியர்கள் 30 பேரிடம் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துஉள்ளன.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பிரதான பாதையை விட்டு லூப் பாதைக்கு மாறும் வகையில் நட்டுகள் கழற்றப்பட்டிருப்பதால் இது நாசவேலை என்கிற தகவல் விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த ஒருவர் இந்த 6 நட்டுகளையும் கழற்ற 30 நிமிடங்கள் ஆகும். அதற்குரிய சாதனத்தை பயன்படுத்தி கழற்றினால் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். விபத்து நடந்த அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தண்டவாள பராமரிப்பாளர் பணியில் இருந்தார். அந்த நேரத்தில் இதுபோன்ற சதிச்செயல் ஏதும் நடைபெறவில்லை. அதன்பிறகு தண்டவாளத்தை கண்காணிக்க வேறு யாரும் பணியில் இல்லை.

எனவே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.26 மணிக்கு அந்த பகுதியை கடந்து செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பு பிரதான பாதையில் இருந்து லூப் பாதைக்கு ரெயில் தடம் மாறும் வகையில் தண்டவாள நட்டுகளை கழற்றி மர்ம நபர்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 12 நிமிடங்கள் தாமதமாக பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கிய லோகோ பைலட் பச்சை சிக்னலை பார்த்து விட்டு தான் ரெயிலை ஓட்டி சென்றுஉள்ளார். ஆனாலும் ரெயில் எப்படி லூப் பாதைக்கு மாறியது என்பது அவருக்கு தெரியவில்லை. கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபுவும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிரதான பாதையில் செல்வதற்கே பச்சை நிற சிக்னல் போட்டதாக தெரிவித்துஉள்ளார்.


இந்த விசாரணையின் போது விபத்து தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது வெளியாட்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரெயிலை கவிழ்ப்பதற்கான இதுபோன்ற நாசவேலை இதற்கு முன்பு பொன்னேரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி நடைபெற்றது. அப்போது தண்டவாள பராமரிப்பாளர் அங்கு வழக்கமான ஆய்வில் ஈடுபட்டபோது தண்டவாள நட்டுகள் கழற்றப்பட்டு கிடந்தன.

எனவே சதி நடந்திருப்பதை கண்டறிந்து அவர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் அப்போது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. ஆனால் இப்போது தண்டவாள பராமரிப்பாளர் பணி முடிந்து சென்ற பிறகு சதித்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இது நாசவேலை என்பது உறுதியாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜரான ரெயில்வே அதிகாரிகள், தண்டவாள பராமரிப்பாளர், லோகோ பைலட் மற்றும் கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி ஆகியோர் ரெயில் விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் இல்லை என்று தெரிவித்தனர்.

மேலும் விபத்து நடந்த பகுதியில் நட்டுகள் கழற்றப்பட்டு இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். ஆனாலும், அந்த அறிக்கையானது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக ரெயில்வே பணியாளர்கள் 11 பேருக்கு கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து ரெயில்வே டி.எஸ்.பி. கர்ணன் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் ரெயில்வே பணியாளர்கள் 10 பேருக்கு கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்களிடமும் டி.எஸ்.பி. கர்ணன் விசாரணை நடத்த உள்ளார்.

இதற்கிடையே கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை மோத வைத்து விபத்தை ஏற்படுத்தி நாசவேலையில் ஈடுபட்டது பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துஉள்ளது. இதையடுத்து அந்த கோணத்திலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News