கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள்தோறும் மழை பெய்து வருகின்றது.
கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு, வினாடிக்கு 2,270 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,240 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் இன்று நீர்வரத்து கிடுகிடு என அதிகரித்து வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது. வினாடிக்கு 4,480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.
இதனிடையே, அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக தென்பெண்ணை ஆற்றில் செல்வது தொடர்ந்தவாறு உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர்.