தமிழ்நாடு
தடுப்புச்சுவரை இடித்து அந்தரத்தில் தொங்கிய கேரள அரசு பஸ்
- தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது
- பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.
கூடலூர்:
தமிழக எல்லையான குமுளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கேரள அரசு பஸ் சென்றது. இதில் 43 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் குமுளி அருகே வண்டிபெரியாறு தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் அய்யப்பா கல்லூரி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
மேலும் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பஸ் அந்தரத்தில் தொங்கிய இடத்தின் கீழ் ஒரு வீடு உள்ளது.
பஸ் கவிழாமல் நின்றதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.