கொடநாடு கொலை வழக்கு விசாரணை: கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மகன் ஆஜர்
- ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
- பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்து விட்டார்.
கொடநாடு வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கனகராஜ் விபத்தில் இறந்தது குறித்து போலீசாருக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதில் இந்த விபத்தை நேரில் பார்த்தது சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் விபத்தை கவனித்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில் இவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
அதன்படி இன்று அவர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.
அவரிடம் நீங்கள் விபத்தை எப்போது பார்த்தீர்கள். அந்த நேரம் நினைவிருக்கிறதா? அப்போது வேறு யாராவது அங்கு இருந்தனரா? விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியுமா? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.