கொடநாடு வழக்கு: செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய தடயவியல் நிபுணர்குழு இன்று திருச்சி வருகை
- செல்போன்களில் இருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர்.
- பலரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்குள் கடந்த 2017-ம் ஆண்டு புகுந்த மர்ம நபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் பின்னர் விபத்தில் பலியானார்.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் பலரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய 8 செல்போன்கள் மற்றும் 5 சிம்கார்டுகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களில் இருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர். இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலீசார் நாடினர். ஆனால் செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்கள் 2 ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கும் வசதி உள்ளதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை யடுத்து திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து செல்போன் அழைப்புகள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள தடவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு இந்த மாதம் இறுதியில் திருச்சி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அந்த தடயவியல் நிபுணர்குழு இன்று வருகைதர உள்ளனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறும்போது கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களிலிருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்ற விவரங்களை சேகரிப்பதற்காக குஜராத்தில் உள்ள தடவியல் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் இன்று வருகிறார்கள்.
இவர்கள் திருச்சி பி.எஸ் .என். எல். அலுவலகம் சென்று அங்கு உள்ள சர்வரில் இருக்கும் தகவல்களை ஆய்வு செய்வார்கள் என்றனர்.