தமிழ்நாடு

தங்களுடைய குழந்தைக்கு நெல்மணிகளைப் பரப்பி எழுத வைத்து வித்யாரம்பம் செய்யும் பெற்றோர்.

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா கோலாகலம்

Published On 2024-10-12 06:25 GMT   |   Update On 2024-10-12 06:25 GMT
  • சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார்.
  • நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என்று இங்கு தான் தனி கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார். கருவறையில் வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் வீற்றிருந்து, வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருந்து ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமர்சையாக நடைபெறும்.

 

சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றபோது எடுத்தப்படம்.

அந்த வகையில் இந்த வருட நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று சரஸ்வதி பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகா சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றது.

இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு இன்று காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் ஒரு தாம்பாளத்தில் நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' வை எழுத வைத்து வித்யாரம்பம் செய்தனர்.

முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்து பின்பு குழந்தைகள் காதுகளில் மந்திரங்களை சொல்லிய பிறகு நெல்மணிகளில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

இந்த விழாவுக்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News