தமிழ்நாடு

மாதவன்குறிச்சி தசரா குழுவினர் கோவிலுக்கு புறப்பட்டு சென்ற காட்சி

தசரா திருவிழாவில் இன்று சூரசம்ஹாரம்: குலசேகரன்பட்டினத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-10-24 05:13 GMT   |   Update On 2023-10-24 05:14 GMT
  • தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும்.

இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.

கோவிலில் கொடியேறியதும் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து, மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புகளை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூலித்து வந்தனர்.

தங்களது ஊர் பெயரில் தசரா குழுக்கள் அமைத்து ஊரில் தசரா குடில் அமைத்து, காவடி, கரகம், நையாண்டி மேளம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, தாரை தப்பட்டையுடன் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மாலை முதல் இரவு 9 மணி வரை சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை, வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். அம்மன் பெயரில் வசூல் செய்த காணிக்கைகளை கோவிலில் கொண்டு பக்தர்கள் சேர்ப்பதற்கு வசதியாக கோவிலை சுற்றி ஏராளமான சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து 1,500-க்கு மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் விடப்பட்டுள்ளனன. 10 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை செல்லும்போது கடும் விரதம் இருந்து காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள்.

கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.

முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்வார். பின்னர் சிங்கமுகமாக மாறி எதிர்கொள்வான். 3-வது எருமை தலையுடனும், 4-வது சேவல் உருவத்திலும் மாறிமாறி வருவான். 4 உருவத்தையும் அன்னை முத்தாரம்மன் அழிப்பார்.

அதன்பின் முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளி அபிஷேகம், பின்பு சிதம்பரேஸ்வரர் கோவில், அதன்பின்பு கோவில் கலை அரங்கத்தில் எழுந்தருளி அபிஷேகம் நடைபெறும்.

நாளை 25-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா சென்று விட்டு நண்பகல் சுமார் 3 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.

அதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், நாளைமறுநாள் (26-ந்தேதி) பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.

சூரசம்ஹாரத்தை காண இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் குலசை பகுதி முழுவதுமே பக்தர்களின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலும் தசரா பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. 

வேடமணிந்து காணிக்கை செலுத்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.

குலசையில் இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரை இருப்பதால், மேற்கு பக்கம் உடன்குடி வழியாகவும் வடக்கு பக்கம் திருச்செந்தூர் வழியாகவும் தெற்கு பக்கம் மணப்பாடு வழியாக மட்டுமே வாகனங்கள் வந்து செல்ல முடியும்.

அதனால் திருச்செந்தூரில் இருந்து மணப்பாடு வரையிலும் மற்றும் உடன்குடி சுற்றுபுற பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக மணப்பாடு உவரி செல்லும் அனைத்து வாகனங்களும் பரமன்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

இதைப்போல நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மணப்பாடு வழியாக செல்வதற்கு சாத்தான்குளம் பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News