குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா- 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்
- முக்கியமான இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
- குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் கோவில் வளாகம், கடற்கரை அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான ஏ.டி.எஸ்.பி., டி.எஸ். பி., இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
முக்கியமான இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை 4 இடங்களில் நிறுத்துவதற்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை முறைப்படி வரிசையாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் கோவில் வளாகம், கடற்கரை அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட வழியாக வரும் அனைத்து பஸ்களும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சமூக நல அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் போலீசாருக்கு உணவு, குடிதண்ணீர் மற்றும் குளிப்பதற்கு வசதி என பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.