தமிழ்நாடு

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது

Published On 2023-12-10 04:55 GMT   |   Update On 2023-12-10 04:55 GMT
  • வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உள்ளது.
  • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் அணைப்பகுதிகளான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் வரட்டு பள்ளம், கல்லு பள்ளம், கும்பரவாணி பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உள்ளது. அணையிலிருந்து 50 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் டி.என். பாளையம் அருகே கொங்கர் பாளையம் வனப்பகுதியை ஒட்டி குண்டேரிபள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 41.75 அடி யாகும். நேற்று முன்தினம் குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் 101 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் 32 அடியாக இருந்த குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று இரவும் குண்டேரிபள்ளம் அணை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் கொண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து இன்று 37.34 அடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 443 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானிசாகர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News