மன்னிப்பு கேட்க மாட்டேன்: காங்கிரசாரின் விளம்பர போராட்டத்துக்கு வாழ்த்துகள்
- எனக்கு எல்லா மக்களும் ஒன்றுதான். சாதி, மதம் பார்ப்பவள் நான் அல்ல.
- ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னை பொதுமேடையில் தி.மு.க.வினர் அவமானப்படுத்தியபோது இவர்கள் யாரும் பெண்களுக்கு ஆதரவாக பொங்கவில்லையே ஏன்?
சென்னை:
போராட்டம் முடிந்து காங்கிரசார் சென்றதும் குஷ்பு வீட்டில் இருந்து வெளியே வந்து அங்கிருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
என் வீட்டு வாசலில் வந்து போராட்டம் நடத்தினால் இரண்டு நாட்கள் விளம்பரம் கிடைக்கும் என்று நினைத்து போராடி இருக்கிறார்கள். இப்படியாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு விளம்பரம் கிடைக்கிறதே வாழ்த்துக்கள்.
நான் 1986-ல் தமிழ்நாட்டுக்கு வந்தேன். இந்த மண் என் சொந்த மண். மானமுள்ள, வீரமுள்ள தமிழச்சியாக தைரியமாக வாழ்ந்து வருகிறேன். என் கருத்தில் நான் பின் வாங்க மாட்டேன். நான் தவறாக எந்த கருத்தும் சொல்லவில்லை. சேரி என்பதற்கு என்ன அர்த்தம். முதலில் அதை சொல்லணும்.
எனக்கு எல்லா மக்களும் ஒன்றுதான். சாதி, மதம் பார்ப்பவள் நான் அல்ல. எல்லோரிடமும் சரி சமமாக பழகுவேன். எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவள்.
ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னை பொதுமேடையில் தி.மு.க.வினர் அவமானப்படுத்தியபோது இவர்கள் யாரும் பெண்களுக்கு ஆதரவாக பொங்கவில்லையே ஏன்?
தலித்துகளுக்கு ஆதரவு என்கிறார்கள். நேற்று கோவையில் இரும்பு கம்பியால் தலித்துகளை தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் சென்று ஏன் போராடவில்லை. விளம்பரம் கிடைக்காது என்ற தயக்கமா? என்னை பொறுத்தவரை தவறு செய்தால் குழந்தையிடம் கூட மன்னிப்பு கேட்பேன். தவறு செய்யாவிட்டால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அப்படி எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.