தி.மு.க. ஆட்சியில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்- எல்.முருகன் பேச்சு
- நாட்டின் வளர்ச்சி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிரதமரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
- சென்னையில் தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவினாசி:
பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட மத்திய தகவல், ஒளிபரப்புதுறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் எல்.முருகன் தொகுதிக்குட்பட்ட அவினாசி பகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு சரித்திர நிகழ்வாகும். நாட்டின் வளர்ச்சி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிரதமரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால்தான் தொடர்ந்து 3-வது முறையாக மக்கள் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவிநாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது .ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அதை கிடப்பில் போட்டுவிட்டது. பவானியில் தண்ணீர் இல்லை என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால் இன்று பவானியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பவானி ஆற்று தண்ணீரை அவிநாசி- அத்திக்கடவுக்கு கொண்டு வர வேண்டும்.
நீண்ட நாள் கோரிக்கையான மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய தேயிலை உள்ளிட்ட மற்ற பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
நாம் இந்த பகுதியில் வெற்றி வாய்ப்பை தவற விட்டு இருக்கலாம். ஆனால் மக்கள் மனதில் என்றும் இடம் பிடித்துள்ளோம். அதனால்தான் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரிய செய்தியாகும். தமிழகத்தில் இன்று சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. சென்னையில் தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று தமிழகத்தில் ஏராளமான கொலைகள் சமீபகாலமாக நடந்து வருகிறது. ஆகையால் தி.மு.க.வை நாம் தூக்கி எறிய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டும்தான் இங்கு நிரந்தரமான தீர்வை கொடுக்க முடியும். அவிநாசி பகுதியில் ஏராளமான சிறு, குறு நெசவாளர்கள் இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தி.மு.க.வினர் தொடர்ந்து மின்சார கட்டண உயர்வை செய்து வருகின்றனர். இதன் மூலம் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மக்களை தி.மு.க. ஆட்சியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.