காதலியை தனிமையில் சந்தித்த காதலன்- காதலியின் தாயிடம் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழப்பு
- சஞ்சய் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
- மகள் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி ரோட்டில் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (வயது 18). இவர் சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். அதே கல்லூரியில் கரூர் மாவட்டத்தை மாணவி தாய்-தங்கையுடன் கல்லூரி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மாணவன் சஞ்சய் மாணவியை பார்ப்பதற்காக அடுக்குமாடி சென்றுள்ளனர். இருவரும் மொட்டைமாடிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென மாணவியின் தாய் எழுந்து பார்த்தபோது மகளை காணாமல் திடுக்கிட்டார். இதனால் அவரை தேடி தேடி மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு மகள் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சஞ்சய் அங்கிருந்து செல்வதற்காக 50 உயரமுள்ள மாடியில் இருந்து குதித்தார். இதில் படுகாயம் அடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் அஸ்தம்பட்டி சரக காவல் உதவி ஆணையாளர் லட்சுமி பிரியா ,இரவு ரோந்து பொறுப்பு காவல் உதவி ஆணையாளர் பாபு, கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் பயின்ற போதே சஞ்சய்க்கும் அந்த மாணவிக்கும் இடையே காதல் இருந்து வந்ததும், கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்ததும் தெரியவந்தது.
மகன் இறந்தது குறித்த தகவல் அறிந்த சஞ்சையின் பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து சஞ்சய்யின் தந்தை சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சஞ்சய் இறந்த செய்தியை அறிந்த உடன் தங்கி இருந்த மற்றும் கல்லூரியின் சக மாணவர்கள் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.