சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்- சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
- வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும்.
- வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது.
வால்பாறை:
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, யானை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
அதிலும் குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும். வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் வால்பாறையை சேர்ந்த ஒருவர் நேற்று காரில், அந்த வழியாக சென்று உள்ளார். அப்போது வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை சாலையோரம் படுத்து கிடந்தது. எனவே அவர் இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வனவர்களுக்கு உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுத்தோட்டம் பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. எனவே அங்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, யானை உலா வந்தால், மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவை இருக்கும் இடத்தில் இருந்து முடிந்தவரை விலகி செல்ல வேண்டும். அதனை விடுத்து வனவிலங்குகளை போட்டோ எடுப்பது, சத்தம் போட்டு கூச்சலிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.