தமிழ்நாடு

கோவில்பட்டி பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் முடக்கம்

Published On 2023-12-23 05:13 GMT   |   Update On 2023-12-23 05:13 GMT
  • கோவில்பட்டி பகுதியில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.
  • தடை செய்ய மத்திய, மாநில, அரசுகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி பகுதியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ளச் சேதங்களால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கோவில்பட்டி நகரின் பிரதான தொழிலான தீப்பெட்டிதொழில் கடும் பாதிப்படைந்து தீப்பெட்டி பண்டல்கள் முடக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் வெளி நாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பெண் பணியாளர்களை வைத்து கோவில்பட்டி பகுதியில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தீப்பெட்டி ஆலைகளுக்கு ஏற்கனவே கடும்நெருக்கடி உள்ளது. குறிப்பாக சீனாவிலிருந்து வரக்கூடிய சிகரெட்லைட்டர்கள் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் தீப்பெட்டிகள் ஏற்றுமதியில் பல்வேறு சிரமங்களும் தடைகளும் ஏற்பட்டு வருகிறது.

மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு, போன்ற இடங்களில் இருந்து தீப்பெட்டிக்கு தேவையான அல்சிசயா என்ற வெள்ளைகுச்சி மரங்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடியில் கொண்டு வரப்பட்டு தூத்துக்குடியில் இருந்து லாரிகள் மூலம் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்படும்.

தற்போது தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அப்படி வரக்கூடிய மரத்தடிகள் கோவில்பட்டி கொண்டுவர முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் வெள்ளபெருக்கு காரணமாக கோவில்பட்டி அருகே உள்ள திட்டக்குளம் தொழில்பேட்டையில் உள்ள சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தீப்பெட்டிகுச்சி தயாரிக்கும் கம்பெனிகள் இயங்கமுடியாத சூழ்நிலைகள் உள்ளது. மேலும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ரூ.100 கோடி தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையால் தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டியில் கடந்த ஒரு வாரமாக மேகமூட்டமும் சிறு மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் தீப்பெட்டிதொழில் மிக மிக பாதிப்படைந்துள்ளது.

அது மட்டுமல்ல கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டிஆலைகள் அதிகம் வருவதற்கு காரணமே கந்தகபூமி என கோவில்பட்டி அழைக்கப்படுவதால் கடுமையான வெயில் காரணமாக தீப்பெட்டிகளில் குச்சிகளில் மருந்துகள் முக்கபட்டு அதை காயவைக்கும் வசதி, தீப்பெட்டி அட்டைப்பெட்டிகள் ஒட்டி அதை காயவைக்கும் வசதி, எந்த ஒருஹீட்டர் வசதியும் இல்லாமல் சர்வசாதாரணமாக செய்யமுடிந்தது.

தற்போது கோவில்பட்டி பகுதி கொடைக்கானல், ஊட்டி, போன்ற வானிலையில் உள்ளதால் குச்சியை காயவைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அரசு போர்க்கால நடவடிக்கையாக தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்னர்.

இது குறித்து தமிழ்நாடு தீபெட்டிஉற்பத்தியாளர் சங்கதலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் கூறும் போது, ஏற்கனவே எங்களுக்கு அடிமேல் அடிவிழுகின்றது. சிகரெட்லைட்டர் சீனாவிலிருந்து மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் தீப்பெட்டி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதை தடை செய்ய மத்திய, மாநில, அரசுகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இருப்பினும் கூட சீனசிகரெட் லைட்டர்கள் மிகமலிவான விலையில் சட்டவிரோதமாக மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நாங்கள் மேலும் இப்பொழுது இந்த கோவில்பட்டி பகுதியில் உள்ள வானிலை காரணமாக தயார் செய்யப்பட்ட தீப்பெட்டிகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்பமுடியாமல் மிகசிரமம் அடைந்து வருகின்றோம் என்றார்.

Tags:    

Similar News