பொன்முடி பதவி இழப்பு- அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு கூடுதல் பொறுப்பு?
- அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
- தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு நிறுத்தி வைக்காமல் தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகிறது. தண்டனை விவகாரம் தொடர்பாக சட்டசபை செயலாளருக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். இதை தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் என அறிவிக்கப்பட்டு அவர் போட்டியிட்டு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
இதனால், உயர்கல்வித்துறை அமைச்சர் என்கிற இலாகாவும் பொன்முடியிடம் இருந்து பறிப்போகிறது. இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷூக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, பள்ளி கல்வித்துறை இலாகாவுடன் கூடுதலாக உயர்கல்வித்துறை பொறுப்பும் அமைச்சர் அன்பில் மகேஷூக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.