தமிழ்நாடு

காதலித்ததற்காக கல் உப்பில் நடக்க வைத்து கொடுமைப்படுத்திய தாய்: மகள் பரபரப்பு புகார்

Published On 2023-11-17 07:06 GMT   |   Update On 2023-11-17 07:06 GMT
  • காதல் விவகாரம் என்னுடைய தாயாருக்கு தெரியவந்தது. எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • காதலன் வீட்டிற்கு வந்த தகவலை எனது தாயாருக்கு செல்போன் மூலமாக தெரிவித்தேன்.

நாகர்கோவில்:

குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த சுனிதா என்ற பெண் சென்றார். அப்போது தனது மகள் அமர்சியாவை வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் கடத்தி சென்றுவிட்டதாக கூறினார். இது தொடர்பாக சுனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது மகளை அதே பகுதியை சேர்ந்த டேனியல் ஆகாஷ் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக கூறினார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அமர்சியா அங்கு இருந்தார். அப்போது அமர்சியாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அமர்சியா தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் விருப்பப்பட்டு தான் டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு வந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து அமர்சியா, டேனியல் ஆகாஷ் இருவரையும் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு சுனிதாவும் வந்திருந்தார். இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அமர்சியா பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

டேனியல் ஆகாஷை நான் காதலித்து வருகிறேன். காதல் விவகாரம் என்னுடைய தாயாருக்கு தெரியவந்தது. எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனது தாயார் என்னை தனி அறையில் அடைத்து வைத்திருந்தார். தரையில் கல் உப்பை போட்டு முட்டி போட்டு நடக்க வைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் அவரிடம் இருந்து தப்பித்து காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். நான் எனது காதலன் வீட்டிற்கு வந்த தகவலை எனது தாயாருக்கு செல்போன் மூலமாக தெரிவித்தேன்.

அதன் பிறகு எனது தாயார் இங்கு வந்து எனது தலைமுடியை பிடித்து என்னை சரமாரியாக தாக்கினார் என்று கண்ணீர் மல்க கூறினார். இதை கேட்ட போலீசார் சுனிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அமர்சியாவிற்கு 19 வயது கடந்து விட்டதால் போலீசார் அவர் விருப்பப்படி தான் அனுப்ப முடியும் என்று கூறினார்கள்.

அமர்சியா தனது காதலன் டேனியல் ஆகாசுடன் செல்வதாக கூறினார். போலீசார் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சுனிதா ஏமாற்றத்துடன் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறினார். இதனால் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News