இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவன்- சிறுமி மீட்பு
- இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
- விசாரணையில் சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும் சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மற்றும் 14 வயதுடைய ஒரு சிறுமியும் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும் சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் போன் நம்பரை பரிமாறி கொண்டுள்ளனர். முதலில் நண்பர்களாக பேசி வந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். வீட்டில் தெரிந்தால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இருவரும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் இருவரையும் திருப்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை திருப்பூருக்கு வரவழைத்துள்ளனர்.