தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளது - கனமழையையும் எதிர்கொள்ள தயார்!

Published On 2023-11-30 07:28 GMT   |   Update On 2023-11-30 08:45 GMT
  • செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டபோதும் குடிசை பகுதி மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
  • எவ்வளவு கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

சென்னை:

சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதை வடிய வைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்த போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரே ஒரு பாதிப்பு, மாம்பலம் கால்வாய் அதை எதிர்கொள்ள திணறியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் தண்ணீரை 4 ஆயிரம் கனஅடியாக குறைக்க சொல்லி உள்ளார்.

அதனால் 6 ஆயிரம் கன அடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாம்பலம் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் அதாவது தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களின் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கும்.

இது சம்பந்தமான விளக்கங்களை முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.

இப்போது நாம் எவ்வளவு பெரிய கால்வாய் கட்டி இருந்தாலும், கடந்த 1 மாத காலமாக ஒவ்வொரு நாளும் 5, 6 செ.மீ. மழை பொழிந்தது. அப்போது மழைநீர் ஏதும் தேங்கவில்லை. 15 செ.மீ. மழை பெய்திருந்தாலும், பாதிப்பு என்பது ஒரு சில இடங்களில் தெரிய தொடங்கி உள்ளது.

அந்த பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய அடுத்து 2, 3 நாட்களில் வர இருக்கிற கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக இன்றைக்கே பாதிப்புக்கான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கெங்கு பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் மோட்டார்களை வைப்பது போன்ற பல்வேறு நிலைகளை மேற்கொள்ள முதலமைச்சர் கூறி உள்ளார்.

அதனால் மீட்பு படையினரும் ஏராளமான வகையில் தயார் நிலையில் உள்ளனர். 

குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், பம்பிங் ஸ்டேஷன் முழு நேரமும் இயங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

தற்போது பல பகுதிகளில் கால்வாய் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பெய்யும் கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News