தமிழ்நாடு

சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்

Published On 2024-02-01 15:20 GMT   |   Update On 2024-02-01 15:20 GMT
  • சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்பும் மனுதாரரின் விருப்பம் பாராட்டத்தக்கது.
  • எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளை பெறுவதில் இது பாதிப்பு ஏற்படுத்தும் என்றார் நீதிபதி.

சென்னை:

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் உள்ளது. சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கிட எந்த உத்தரவும் இல்லாத நிலையில் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்ட படிவங்களில் சாதி, மதம் குறித்த கேள்விகள் அடங்கியுள்ள பகுதியை பூர்த்திசெய்ய விரும்பாதவர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை உள்ளது. எனவே சாதி, மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை என்றால் அந்தப் பகுதியை விட்டுவிடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்பும் மனுதாரரின் விருப்பம் பாராட்டத்தக்கது என்றாலும்கூட, இதுபோன்ற சான்றிதழ் பெறும்போது ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் கவனிக்க வேண்டும். அப்படி சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதில் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News