மதுரை சித்திரை திருவிழா: ஏப்.20-ந்தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
- மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
- 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.
மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.
24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.
மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.