மதுரை-நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை பணி: ரெயில்வே கேட் பகுதிகளில் "ரப்பரைஸ்ட்" சீட்டுகள்
- நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே அமைக்கப்பட உள்ள இரட்டை ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
- ரெயில்வே கேட்களில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில்-நெல்லை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தற்பொழுது இரட்டை ரெயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ரெயில்வே கிராசிங் பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரெயில்வே கேட்டை மூடிவிட்டு தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரெயில்வே கேட் பகுதிகளில் உள்ள தண்டவாள பகுதிகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ள இடத்தில் நவீன மயமாக்கப்படும் வகையில் ரப்பர் சீட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து ரப்பரைஸ்ட் சீட்டுகள் கொண்டு வரப்பட்டன. தற்போது தண்டவாளங்கள் அமைக்கப்படும் பகுதியில் சிமெண்ட் கற்களுக்கு பதிலாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே கேட் பகுதிகளில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகின்றன.
குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்பொழுது ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட், ராஜாவூர் பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குலசேகரன் புதூர் பகுதியில் ரெயில்வே கேட்டில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு அதற்கான பணியை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
2 நாட்களுக்குள் அந்த பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கோதைகிராமம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து மற்ற ரெயில்வே கேட்களிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல் கன்னியாகுமரி-நாகர்கோவில் பகுதியில் ஏற்கனவே இரட்டை ரெயில் பாதை பணிக்காக பல்வேறு ரெயில்வே கேட்டுகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிமெண்ட் கற்களை அப்புறப்படுத்தி விட்டு அந்த பகுதிகளிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் நாகர்கோவில்-திருவனந்த புரம் இடையே அமைக்கப்பட உள்ள இரட்டை ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்களில் வாகனங்கள் இலகுவாக செல்ல வசதியாக ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி, ராஜாவூர் பகுதிகளில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3-வது கேட்டாக குலசேகரன்புதூர் பகுதியில் இந்த பணி நடந்து வருகிறது. மற்ற ரெயில்வே கேட் பகுதிகளிலும் ரப்பரைஸ்ட் சீட்டுகள் அமைக்கப்படும்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் அகற்றப்பட்டு ரப்பரைஸ்ட் சீட்டுகள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கேட்டில் பணி மேற்கொள்வதற்கு 2 நாட்கள் ஆகும். அந்த நேரங்களில் அந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.