தமிழ்நாடு

மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தது சரியான நடவடிக்கை - திருமாவளவன்

Published On 2024-09-08 06:24 GMT   |   Update On 2024-09-08 06:24 GMT
  • அரசுப்பள்ளிகளில் சனாதன சக்திகளில் ஊடுருவல் அதிகரித்துள்ளது.
  • அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புபவர்களை அடையாளம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "அரசுப்பள்ளிகளில் சனாதன சக்திகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளர் என்ற பெயரில் பலர் அரசு கல்வி நிறுவனங்களில் ஊடுருவி தமது கருத்துக்களை திணித்து வருகின்றனர்.

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப்பள்ளிகளில் மாணவர்களிடம் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை ஆன்மிகம் என்ற பெயரில் பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புபவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள், அழகில்லாமல் இருப்பவர்கள் போன பிறவியில் பாவம் செய்தவர்கள் என்று அவர் பேசியுள்ளார். ஆகவே அவரை போலீசார் கைது செய்தது சரியான நடவடிக்கை தான்" என்று பேசியுள்ளார்.

Tags:    

Similar News