கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு
- யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கியது.
- டாக்டர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்டு யானையின் உடலை மீட்டு, உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. பின்னர் அங்கு உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்த போதிலும் வனவிலங்குகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கூடலூர் அடுத்த புளியம்பாறை பகுதிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. பின்னர் அங்குள்ள விளைநிலங்களை நோக்கி சென்றது. அப்போது காட்டு யானை திடீரென தும்பிக்கையை உயர்த்தி பிளிறியது.
மேலும் அங்குள்ள மரம் ஒன்றையும் இழுத்து சாய்க்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக மரம் சாய்ந்து அங்குள்ள மின்கம்பியின் மீது விழுந்தது.
இதில் யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கியது. இதில் யானை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது.
இன்று அதிகாலையில் வயல்வெளிக்கு வந்த அப்பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மாவட்ட வனஅதிகாரி கவுதமன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை. யானை இன்று அதிகாலை இரைதேடி ஊருக்குள் புகுந்ததும், அப்போது மரம் ஒன்றை சாய்த்தபோது, மின்சாரம் தாக்கி பலியானது தெரிய வந்தது.
தொடர்ந்து அங்கு கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்டு யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புளியம்பாறையில் மின்சாரம் தாக்கியதில் ஆண் காட்டு யானை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.