தமிழ்நாடு (Tamil Nadu)

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் திருப்பணிகள் தொய்வு- இணை ஆணையர் நேரில் ஆய்வு

Published On 2023-02-26 12:39 GMT   |   Update On 2023-02-26 12:39 GMT
  • கடந்த 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தடுத்து 5ஆண்டுகள் கடந்து இன்று வரை நடத்தப்படவில்லை.
  • கோவில் திருப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர் ஸ்தபதி நந்தகுமார் நிதி பற்றாக்குறை, உபயதாரர்கள் ஒத்துழைப்பு இல்லை என காரணம் காட்டி இன்னும் 4மாதம் ஆகும் என்றார்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1998ல் நடந்தது. அடுத்தடுத்து 5ஆண்டுகள் கடந்து இன்று வரை நடத்தப்படவில்லை. மீண்டும் நடத்த முடிவெடுத்து, தற்போது கோவில் சன்னதிகள், மண்டபங்கள், வளாகம் உள்ளிட்ட பகுதிகள் பழமை மாறாமல் வைணவ ஆகமமுறைப்படி மத்திய தொல்லியல்துறை விதிகளின்கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

உபயதாரர்களை காரணம் காட்டி பணிகள் தொய்வடைந்து வந்தது. 108 வைணவ தளங்களில் 63-வது கோவில் மூவலர் கருவரை மூடிக்கிடப்பதால் எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்? என பக்தர் ஒருவர் கேள்வி கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் திருப்பணிகள் குறித்தும், கும்பாபிஷேகம் எப்போது நடத்துவீர்கள் எனவும், கேள்வி எழுப்பினார். அதற்கு கோயில் நிர்வாகம் மே.4ல் கும்பாபிஷேகம் நடத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், உள்ளிட்ட அதிகாரிகள் கோயிலை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது கோவில் திருப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர் ஸ்தபதி நந்தகுமார் நிதி பற்றாக்குறை, உபயதாரர்கள் ஒத்துழைப்பு இல்லை என காரணம் காட்டி இன்னும் 4மாதம் ஆகும் என்றார். அதனால் இன்னும் கும்பாபிஷேகம் நடத்த நாட்கள் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் தெரிவித்த தேதியில் பணிகளை விரைவாக முடித்து கும்பாபிஷேகம் நடத்த முடியுமா? உபயதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா? என்பது குறித்தும் இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News