மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கரையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் நேற்று வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அங்கு பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த தகவலை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.