தமிழ்நாடு

குற்றாலம் மெயினருவியில் இன்று காலை குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை- குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Published On 2023-01-25 07:50 GMT   |   Update On 2023-01-25 07:50 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக திடீரென பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பை, ராதாபுரத்தில் தலா 15 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் அணை பகுதியில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாநகர பகுதியில் பெய்த பரவலான மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. பெரும்பாலான சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சீரானது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்றும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று மாலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக கொட்ட தொடங்கியது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மெயின் அருவியில் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும், ராமநதியில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

Similar News