மணிமுத்தாறு அருவியில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்துள்ளது. இதனால் கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 5-வது நாளாக இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தொடர்ந்து 5-வது நாளாக தடை விதித்துள்ளனர். எனினும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.