தனுஷ்கோடியில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி இறங்கு தளம் இடிந்து கடலில் மூழ்கியது
- இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த பாலம் பயன்பாட்டில் இருந்தது.
- பாலம் ஒரு பகுதி சேதடைந்து உடைந்து கடலில் மூழ்கி வருகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த பகுதியில் கடல் பெரும்பாலான நாட்களில் கடல் சீற்றத்துடனேயே காணப்படும். இதனால், இந்த பகுதியில் துணை துறைமுகம் அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், இங்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் 70 அடி அகலமும், 70 அடி நீளமும் கொண்ட 'டி' வடிவிலான மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த இடத்தில் மீன் இறங்கு தளம் அமைத்தால் சேதமடைந்து விடும் என தெரிவித்தனர். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதன் பின்னர் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த பாலம் பயன்பாட்டில் இருந்தது. இதன் பின்னர் கடல் சீற்றம் காரணமாக அந்த பகுதிக்கு மீனவர்கள் படகுகளுடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து, மீனவர்கள் இந்த மீன் இறங்கு தளத்தை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். இதன் பின்னர் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களில் செல்பி எடுக்கும் இடமாக இந்த பாலம் மாறியது.
இந்த நிலையில் தொடர்ந்து சூறை காற்று மற்றும் கடல் சீற்றத்தில் ஏற்படும் அலைகள் மீன் இறங்கு தளத்தில் மீது மோதி மோதி பாலம் சேதமடைய தொடங்கியது. இதன் பின்னர் அந்த பாலம் முழுமையாக அடைக்கப்பட்டது. தற்போது பாலம் ஒரு பகுதி சேதடைந்து உடைந்து கடலில் மூழ்கி வருகிறது. மீனவர்கள் பலமுறை எச்சரித்தும் அந்த இடத்தில் பாலத்தை கட்டி ரூ.15 கோடியை அதிகாரிகள் வீணடித்து விட்டதாக தனுஷ்கோடி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.