எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கல்லூரிகளில் சேர வருகிற 14-ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
- மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.
சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கை நிறைவடைந்து உள்ளது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மற்ற இடங்கள் இணைய வழியில் நடைபெற்றது. அதன்படி, அனைத்து இடங்களும் தகுதியான மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ இடங்கள் பெற்று சோ்க்கை ஆணை பெற்றவா்கள் நேற்று மாலைக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ மாணவா் தோ்வுக்குழு செயலா் முத்துசெல்வன் கூறுகையில், கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.
அதை ஏற்று, மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், கல்லூரிகளில் சேராதவா்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.