தமிழ்நாடு

எம்.ஜி.ஆர். சிலை கை உடைந்து இருப்பதை காணலாம் - அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

திருப்பத்தூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு- அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

Published On 2023-01-03 08:53 GMT   |   Update On 2023-01-03 08:53 GMT
  • எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.
  • வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள ஜடையனூர் கூட்ரோடு பகுதியில் அ.தி.மு.க.வினரால் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலை கையை உடைத்துள்ளனர். இன்று காலை எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர். எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி திருப்பத்தூர் சாலையில் மறியல் செய்தனர்.

தகவல் அறிந்து குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் அங்கு வந்த வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டனர்.

இதுகுறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் குரிசிலாப்பட்டு போலீசில் ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் புகார் கொடுத்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ஓரிரு நாட்களில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

ஜடையனூர் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News