நள்ளிரவில் மது விருந்து? ஓடை வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்கள்
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.
- மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே இளந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் மது விருந்து நடந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக செண்பகதோப்பு ஓடையை கடந்து 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் மது விருந்து முடிந்து நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக செண்பகத்தோப்பு ஓடையில் அதிக அளவு தண்ணீர் வர தொடங்கியது.
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றால் ஓடையை கடந்து விடலாம் என எண்ணி ஓடைக்குள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி உள்ளனர்.
ஆனால் அதிக நீர்வரத்து காரணமாகவும், போதையில் இருந்ததாலும் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து சிக்கிக் கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரையேறினார். மற்ற இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் தனி நபராக அவர் நண்பர்களை மீட்க முயன்றார். ஆனால் இயலவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல மணி நேரம் அவர்கள் தண்ணீரிலேயே அங்கிருந்த கோரைப் புல்லை பிடித்து கொண்டு தண்ணீரில் தத்தளித்தனர்.
அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ராஜபாளையம் தீயணைப்பு நிலை அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.
விசாரணையில் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ராஜபாளையம் குப்புசாமி ராஜா தெருவை சேர்ந்த வெங்கட்குமார் (வயது 25), பி.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (31) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரவு மது விருந்து நடந்ததா? நடத்தியவர்கள் யார்? அதில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?, ஓடையில் சிக்கிய வாலிபர்கள் மது குடித்து விட்டு வந்தவர்களா?, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.