தமிழ்நாடு

பள்ளி கல்வித்துறைக்கு பொறுப்பேற்ற பின் 200 பள்ளிகளில் ஆய்வு- கொளத்தூரில் நிறைவு செய்ய அன்பில் மகேஷ் திட்டம்

Published On 2024-09-25 08:50 GMT   |   Update On 2024-09-25 08:50 GMT
  • ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட மைய நூலகத்தில் நேற்று தனது 200-வது ஆய்வை நிறைவு செய்துள்ளார்.
  • அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மொழி சிறுபான்மையினருக்கான பள்ளிகள் என 77 வகைகளில் ஆய்வு செய்து வருகின்றார்.

சென்னை:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று, பள்ளிக்கூடம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2 வருடத்திற்கு முன்பு தனது முதல் ஆய்வை ஆரம்பித்து, நேற்று ராமநாதபுரம் தொகுதியில் (24-ந்தேதி ) 200-வது ஆய்வை நிறைவு செய்துள்ளார்.

பள்ளிகளில் மாணவ-மாணவிகள் கற்கும் முறை, ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் விதம், நூலகங்கள், கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மொழி சிறுபான்மையினருக்கான பள்ளிகள் என 77 வகைகளில் ஆய்வு செய்து வருகின்றார்.

இப்போது ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட மைய நூலகத்தில் நேற்று தனது 200-வது ஆய்வை நிறைவு செய்துள்ளார். அங்குள்ள பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்ததுடன் நூலகத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை துரிதபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணையிட்டுள்ளார்.

தொடர்ந்து மற்றத் தொகுதிகளுக்கும் ஆய்வினை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கடைசியாக 234-வது ஆய்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News