விவேகானந்தா கல்லூரியில் நாளை 380 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது- அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்குகிறார்
- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
- தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருது வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் 380 பேருக்கும் விருதுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி விழா பேருரையாற்றுகிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசுகிறார். பள்ளி கல்வி துறை அரசு செயலாளர் குமரகுருபரன் திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை உரையாற்றுகிறார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார் சின்ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றுகிறார்கள். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறுகிறார்.
இந்த விழாவில் விருது பெறுபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் தங்கும் இடம், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.