தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படும்- வானதிக்கு அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
- ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை என வானதி குற்றச்சாட்டு
- பருப்பு விநியோகம் தொடர்பான எனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை எனவும் ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வானதியின் குற்றசாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "பருப்பு விநியோகம் தொடர்பான எனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்கப்படும்.
அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று (15.10.2024) வரை 9,461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 2,04,08,000 பாமாயில் பாக்கட்டுகள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கட்டுகள் விநியோகப்பட்டுவிட்டன. மீதியுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.