பல் போய், தாடி வளர்ந்து... ரஜினிகாந்த் மீது அமைச்சர் துரைமுருகன் தாக்கு
- திமுக-வில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- ரஜினி.
- வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது- துரைமுருகன்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரைமுருகன் பதில் கூறியதாவது:-
மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதை மறந்துட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த் பேசும்போது கூறியதாவது:-
முதலமைச்சரின் கையில் புத்தகத்தை பெற்றது பெருமை அளிக்கிறது. கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி என்று கூறினால் சினிமா, இலக்கியம், அரசியல். கலைஞர் எனும் தாய் என்ற நூல் காவியமாக அமைந்துள்ளது.
தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய தலைவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ஆலமரம். கருணாநிதி மறைவுக்கு பிறகு அவரது புகழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டவர் கலைஞர். தற்போது அலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.
பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி. அறிவார்ந்தவர்கள் சபையில் பேசாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் தற்போது பேசிதான் ஆக வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகில் எந்த தலைவருக்கும் இவ்வளவு சிறப்பாக விழா கொண்டாடியது கிடையாது.
எதை பேச வேண்டும் என்பதைவிட, எதை பேசக் கூடாது என்பது முக்கியமானது. முதலமைச்சர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி.
ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம். அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். பள்ளியில் புதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம். திமுகவில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஏதாவது விசயம் செய்து எப்படி இருக்கிறது என கேட்டால், சந்தோஷம் என்பார். நல்லா இருக்கிறது என்பதற்காக சந்தோசம் என சொல்கிறாரா? ஏண்டா இப்படி செய்கிறீர்கள் என்பதற்காக சந்தோசம் எனச் சொல்கிறாரா? என ஒன்னும் புரியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.