தமிழ்நாடு

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பாதிப்பு வராது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2024-08-12 09:07 GMT   |   Update On 2024-08-12 09:07 GMT
  • மழை வந்தவுடனே பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் தொடர்ந்து சந்தித்து வந்தோம்.
  • பெரிய அளவிலான பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி இருப்பவர் முதலமைச்சர்.

சோழிங்கநல்லூர்:

ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.666.32 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பெருங்குடி சர்ச் சாலையில் இந்த பணியின் தொடக்க விழா நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் வரவேற்றார். அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

சென்னை மாநகர வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2ஆயிரம் கோடி அளவுக்கான திட்டங்களை ஒரே நாளில் தொடங்கி வைத்தது என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்றைக்கு மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கான திட்டங்களை இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

மழை வந்தவுடனே பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் தொடர்ந்து சந்தித்து வந்தோம். தற்போது சென்னையில் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் தற்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.

நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நீலாங்கரை மதியழகன், பாலவாக்கம் சோமு, சென்னை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பாலவாக்கம் விசுவநாதன் ஜே.கே.மணிகண்டன், 184-வது வட்ட செயலாளர் ஆர்.தேவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News