தமிழ்நாடு

குழந்தை கை இழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை இன்று கிடைக்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2023-07-03 09:39 GMT   |   Update On 2023-07-03 09:39 GMT
  • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவே இருந்துள்ளது.
  • தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

சென்னை:

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (32). இவரது மனைவி அஜிஷா. இவர்களது 1 1/2 வயது குழந்தை முகமது மகிர்.

இந்த குழந்தைக்கு தலையில் நீர் கட்டியதால் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி இருந்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தலையில் ஆபரேசன் நடந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் போடப்பட்டதும் கை கருத்துள்ளது. டாக்டர்கள் பரிசோதித்ததில் கை ரத்த ஓட்டம் இல்லாமல் அழுகிப்போனதால் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கை அகற்றப்பட்டது. செவிலியரின் கவனக்குறைவால் தான் கை அகற்றப்பட வேண்டியதாயிற்று என்று புகார் கூறினார்கள்.

இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவே இருந்துள்ளது. மருத்துவ துறையின் கவனக்குறைவால் பிரச்சினை ஏற்பட்டதா? என்று கண்டறிய 3 டாக்டர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் விசாரித்து வருகிறார்கள். இந்த குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் கிடைத்துவிடும். கவனக்குறைவு இருந்தது தெரியவந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. பொதுமக்களும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

டெங்கு வரவே வராது என்று சொல்ல முடியாது. பதற்றம் அடைய வேண்டியதில்லை. கடந்த 2017-ம் ஆண்டு டெங்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது தமிழகத்தில் மிகவும் குறைந்துவிட்டது. இறப்புகள் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News