தமிழ்நாடு

தேர்தலுக்காக ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பா.ஜ.க.வினர் கையில் எடுத்துள்ளனர்: அமைச்சர் மனோ தங்கராஜ்

Published On 2024-01-12 04:54 GMT   |   Update On 2024-01-12 04:54 GMT
  • அயோத்தி விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை.
  • சங்கராச்சாரியார்களே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளுக்கு எதிராக கருத்துகள் கூறுகிறார்கள்.

நாகர்கோவில்:

தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதாரணமாக ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவரை ஊக்குவிக்கும் விதத்தில் எந்த பொதுத்துறையின் தலைவரும் அரசு பொறுப்பில் இருப்பவர்களும் நடக்கக்கூடாது.

அது சிறந்த முன் உதாரணமாக இருக்காது. ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை ஒரு கவர்னர் சந்தித்திருப்பது தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும். நாடு முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு பொறுப்புகளை வழங்குவது போன்ற செயல்களில் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறது.

இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும். இதைத்தான் ஒரு பாசிச அணுகுமுறை என்று நாம் சொல்கிறோம். தாங்கள் சொல்வது தான் முடிவு. நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று பாரதிய ஜனதா செய்து வருகிறது. தங்களுடன் இருப்பவர்கள் எது செய்தாலும் தவறு இல்லை என்றும் தங்களை சார்ந்து இருப்பவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்ற மனநிலையில் தான் பா.ஜ.க.வினர் உள்ளனர்.

அயோத்தி விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை. சங்கராச்சாரியார்கள் 2 பேர் முக்கியமான கருத்தை வலியுறுத்தியுள்ளனர். ஒன்று அவர்கள் தர்ம ஆச்சாரப்படி அது நடைபெறவில்லை.

இன்னொன்று ஒரு கட்டி முடிக்கப்படாத கோவிலை திறந்து வைப்பது என்று கூறியுள்ளனர். ஆச்சார விதிமுறைகளுக்கு எதிராக ஏன் அதை செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றும் கேட்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். பாரதிய ஜனதா அவர்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

எல்லா விஷயங்களிலும் சங்கராச்சாரியார்களிடமும் மத குருக்களையும் கருத்துகள் கேட்கும் அவர்கள் சங்கராச்சாரியார்களே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளுக்கு எதிராக கருத்துகள் கூறுகிறார்கள். இதற்கு பாரதிய ஜனதா கட்சி பதில் சொல்ல வேண்டும். சங்கராச்சாரியார்கள் சொல்வதை பார்த்தால் தேர்தலுக்காக இந்த பிரச்சனையை அவர் கள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News