அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும்: அமைச்சர் முத்துசாமி
- கீழ்பவானி பாசன பகுதியில் முதல்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் மது பார்கள் ஏலம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு:
கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக நசியனூர், நாதிபாளையம், கூகலூர், புதுவள்ளியம் பாளையம், அளுக்குளி மற்றும் கலிங்கியம் ஆகிய 6 இடங்களில் இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் திறக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். அமைச்சர் சு.முத்துசாமி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். இந்த மையங்களில் முதல் தர நெல் குவிண்டால் 2310 ரூபாய்க்கும், பொது ரக நெல் குவிண்டால் 2265 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கீழ்பவானி பாசன பகுதியில் முதல்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அறுவடை கூடும் இடங்களில் மொத்தமாக 51 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும். இங்கு முதல் தர நெல் 23 ரூபாய் 10 காசுகளும், பொது ரகத்திற்கு 22.65 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 1 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானம் அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். வேறு உள்நோக்கம் ஏதும் கிடையாது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் சீராக சென்றடைய வேண்டும்.
இதற்காக நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சீரமைப்பு திட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீதிமன்ற அவதிப்பு எதுவும் செய்யவில்லை. அத்திகடவு-அவினாசி திட்டத்தில் இன்னும் 16 குளங்கள் மட்டுமே சோதனை நடத்தப்பட வேண்டி உள்ளது. ஒரு வார காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.
டாஸ்மாக் மது பார்கள் ஏலம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புகார் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.