தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.யில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published On 2024-09-26 07:28 GMT   |   Update On 2024-09-26 07:28 GMT
  • தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
  • வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகிறது.

கோவை:

கோவை விளாங்குறிச்சி அருகே டைட்டில் பார்க் வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவையில் உள்ள மிகப்பெரிய துறை இது. பல்வேறு காரணங்களால் கட்டிடம் தாமதம் ஆகியது. இருந்தாலும் உரிய விதிமுறைகள், சான்றிதழ்கள் பெற்று இந்த கட்டிடத்தை திறக்க இருக்கிறோம். இந்த தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறக்கப்படுவதன் மூலம் 3,250-க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும்.

இதில் ஒரு சில நிறுவனங்கள் இடத்தை முழுமையாக கேட்கின்றன. ஆனால் அது நியாயமாக இருக்காது. இதற்கு என்று விதிமுறை உருவாக்க தெரிவித்துள்ளேன்.

அதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு என்று 15 ஆயிரம் சதுரடியாவது வழங்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறேன்.

தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நிதி துறையில் சீர்திருத்தம் செய்த மாதிரி, தகவல் தொழில்நுட்பத் துறையில் சீர் திருத்தம் செய்ய வேண்டும்.

அதற்காகவே உங்களை அங்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். அதன்படி நான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் சில இடங்களில், அணுகு முறையில் திருத்தம் தேவைபடுகின்றது.

நான் வேறு துறையில் இருப்பதால் ஜி.எஸ்.டி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. நான் உறுப்பினராக இருந்த போது ஜி.எஸ்.டி. திட்டமிடுதலில் உள்ள குறைகளை சுட்டிகாட்டி இருக்கிறேன்.

ஜி.எஸ்.டி. விவகாரத்தில் மத்திய அரசின் மனப்பான்மை சரியாக இருக்க வேண்டும். ஜி.எஸ்.டியில் உள்ள தவறுகளை வேகமாக சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது எல்காட் நிறுவன மேலாண் இயக்குனர் கண்ணன், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News