தமிழ்நாடு (Tamil Nadu)

மின்சாரத்துறையை அமைச்சர் பழனிவேலிடம் கொடுத்திருந்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருந்திருக்காது- கருப்பணன்

Published On 2024-10-10 08:26 GMT   |   Update On 2024-10-10 08:26 GMT
  • தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது.
  • பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுமியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் அல்லது அவர்களை தூக்கிலிட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க.வினர் கூட்டணி இல்லாததால் மத்தியில் மைனாரிட்டி அரசாக உள்ளது.

பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் அ.தி.மு.க 20, பா.ஜ.க 15 என 35 தொகுதிகள் பிடித்திருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக வரவேண்டும் என்பதற்கு அ.தி.மு.க பாடுபட முடியுமா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது. மற்ற மாநிலங்களில் குறைவாக கொடுக்கிறது. மக்களின் பணத்தை ஏமாற்றியதற்கு சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News