மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு - அமைச்சர் பொன்முடி
- சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
- சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் ஏன் கொடுக்க முடியாது என்ற காரணத்தை கவர்னர் விளக்க முடியுமா?
சென்னை:
மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாளை நடைபெற உள்ள மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை கவர்னர் ஏற்கவில்லை.
கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவுக்கு உள்ளது.
சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் ஏன் கொடுக்க முடியாது என்ற காரணத்தை கவர்னர் விளக்க முடியுமா?
அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடுவதுதான் கவர்னரின் வேலை.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக கவர்னர் செயல்படுகிறார். மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் கவர்னர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.