தமிழ்நாடு

திருப்போரூர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு

Published On 2024-01-20 10:50 GMT   |   Update On 2024-01-20 10:50 GMT
  • ரூ. 47 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீமத் சிதம்பர சாமிகள் மடம் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றும் வருகின்றன.
  • மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

சென்னை:

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தைகிருத்திகையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) திருப்போரூர், கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடு அரங்குகளை பார்வையிட்டு, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும், கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்போரூர் கந்தசாமி கோவில் சார்பில் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் திறக்கப்படாமல் இருந்த திருமண மண்டபத்தை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திறந்து வைக்கப்பட்டது. மேலும் கோவில் அலுவலகத்திற்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் முடிவுறும் நிலை யிலும், ரூ.6.65 கோடி செலவில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி தொடங்கப்படும் நிலையிலும், ரூ. 47 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீமத் சிதம்பர சாமிகள் மடம் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றும் வருகின்றன.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு இறை பசியோடும், வயிற்றுப் பசியோடும் வருபவர்களின் இரண்டு பசியையும் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் 2 கோவில்களில் செயல்படுத்தப்படட முழு நேர அன்னதானத் திட்டம் 8 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதோடு, இந்தாண்டு மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அதேபோல ஒருவேளை அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோவில்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இவ்வாண்டு மேலும் 7 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் பக்தர்கள் உணவருந்துகின்றனர்.

இதற்கான ஆண்டு ஒன்றிற்கு 105 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கோவில்களின் அன்ன தானம் மற்றும் பிரசாதத்தின் தரத்தினை உறுதிபடுத்தி ஒன்றிய அரசின் தரச்சான்றிதழ்களை இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் பெற்று உள்ளது.

பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு 20 நாட்கள் நாளொன்றுக்கு 10,000 நபர்கள் வீதம் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும், பழனி கோவில் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகின்றது. வடலூர் வள்ளலார் கோவிலில் ஒரு நாளைக்கு 10,000 சன்மார்க்க அன்பர்கள் என 3 நாட்களுக்கு 30,000 சன்மார்க்க அன்பர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் திருவிழா காலங்களில் 500 நபர்க ளுக்கும், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமை தோறும் 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. இப்படி பல்வேறு நல திட்டங்களால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைத்து தருகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,225 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. மேலும் இந்த மாத இறுதிக்குள் 1,316 ஆக இந்த எண்ணிக்கை உயரும். அதே போல் நில மீட்பை பொறுத்த அளவில் ரூ. 5,508 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் நிலத்தை மீட்டிருக்கின்றோம்.

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருக பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ரூ. 599.50 கோடி மதிப்பீட்டில் 238 பணிகளும், அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.131.97 கோடி மதிப்பீட்டில் 173 பணிகளும் ஆக மொத்தம் முருகன் கோவில்களில் மட்டும் ரூ.731.47 கோடி மதிப்பீட்டில் 411 பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தாண்டு முதல் 1000 மூத்த குடிமக்களை அறுபடை வீடுகளுக்கு கட்ட ணமில்லாமல் அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணம் வரும் 28-ந்தேதியும், ராமேஸ் வரம் – காசி ஆன்மிகப் பய ணத்தில் இந்தாண்டு 300 நபர்கள் 5 கட்டங்களாகவும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்து சமய அறநிலைத் துறையானது இப்படி பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

பாம்பன் சுவாமிகளின் மயூர வாகன சேவனத்தின் 100 ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி, அவரது வாழ்க்கை வரலாற்று சரித்திரத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டும், 108 இசைக் கல்லூரி மாணவ, மாணவியர் சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் ஆகியவற்றை பாராயணம் செய்தும் சிறப்பு செய்தோம். ஆனால் இன்று சிலர் சுத்தமாக இருக்கின்ற கோவில்களையே சுத்தப்படுத்துவது போல மீடியா பப்ளிசிட்டிக்காக செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதற்கு கவர்னர் துணை நின்று, சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டு இருக்கின்றார். ஏற்கனவே ஆலயங்கள் அனைத்தும் தூய்மையாக தான் பராமரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினையை நான் ஏற்கனவே அமைச்சர் என்ற முறையில் இரண்டு முறை அவர்களை அழைத்து தலைமைச் செய லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றேன். துறையினுடைய செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் அழைத்து பேசியிருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திலும் சுமார் 8 முறை பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றோம். மனது ஒத்துப் போனால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அமைச்சர் பி. கே.சேகர்பாபு கூறினார்.

இந்நிகழ்ச்சிகளின் போது, செங்கல்பட்டு சார் ஆட்சியர் வி.எஸ்.நாராயண சர்மா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் எம்.தேவராஜ், கோவில் செயல் அலுவலர் கே.குமர வேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News