தமிழ்நாடு (Tamil Nadu)

அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 2200 பஸ்கள் வாங்க டெண்டர்: அமைச்சர் தகவல்

Published On 2024-06-14 08:16 GMT   |   Update On 2024-06-14 08:16 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
  • மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால் தங்கள் பகுதியின் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 25-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பேட்டியின் விபரம் பின்வருமாறு:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்கக்கூடாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வரை வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆம்னி பஸ்கள் இயக்க முடியாது. இதனை மீறி இயக்கினால் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்.

தமிழகத்திற்கு ஏற்கனவே 2000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 850 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 2200 புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு புதிதாக 3000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் தமிழகத்திற்கு புதிதாக 7200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநகர தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, வக்கில்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

Similar News