தமிழ்நாடு

4 ஆயிரம் பஸ்கள் வாங்க அரசு நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

Published On 2024-02-13 03:31 GMT   |   Update On 2024-02-13 03:31 GMT
  • சமீபத்தில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.
  • எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் வெறும் 3 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டன.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று நிறைவடைந்த பிறகு, தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது, 'தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை' என்று அவர் குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்து தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி வருமாறு:-

சமீபத்தில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். ஏற்கனவே உள்ள 99 புதிய பஸ்களுடன் இப்போது 199 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 4 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் அவை வாங்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு நிதியில் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான பணியும், ஜெர்மன் வங்கி நிதி உதவியில் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளன. கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் புதிய பஸ்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் 10 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் வெறும் 3 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டன.

ஆசியாவிலேயே சிறந்த பஸ் நிலையமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வருவதற்கு தயாராக இருந்தால் நானும், அமைச்சர் சேகர்பாபுவும், அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன? என்பதை அவருக்கு காட்ட தயாராக இருக்கிறோம்.

300-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இன்றும் கிளாம்பாக்கம் பஸ் முனையத்திலிருந்துதான் இயக்கப்படுகின்றன. தற்போது வரை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Tags:    

Similar News