சீரான பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது: அமைச்சர் தங்கம்தென்னரசு
- 2022-23-ம் ஆண்டில் மற்ற மாநிலங்களுக்கான தரவுகள் நம்மிடம் வராததால் இன்னும் அந்த ஒப்பீடு செய்ய காத்திருக்க வேண்டி சூழ்நிலை உள்ளது.
- திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும் நோக்கங்களுமே பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.
சென்னை:
சென்னையில் மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதாரமாகவும், நிலைத்த விலையில் 3-வது பெரிய பொருளாதாரமாகவும் திகழ்கிறது. கொரோனாவுக்கு பிறகு தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதிகரித்து வருகிறது.
2022-23-ம் ஆண்டில் மற்ற மாநிலங்களுக்கான தரவுகள் நம்மிடம் வராததால் இன்னும் அந்த ஒப்பீடு செய்ய காத்திருக்க வேண்டி சூழ்நிலை உள்ளது.
ஒட்டுமொத்த மாநில பொருளாதாரம் 2021-22-ல் 7.2 சதவீத அளவிலும் 22-23-ம் ஆண்டில் 8.1 என்ற அளவிலும் வளர்ச்சி உள்ளது.
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும் நோக்கங்களுமே பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.
மாநிலப் பொருளாதாரம் 2021-22-ல் நிலைத்த விலையில் 7.92 சதவீத அளவிலும், 22-23-ம் ஆண்டில் 8.19 என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானமும் அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் 67 சதவீதமாக இருந்த தனிநபர் வருமானம் 69 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதாவது 2021-22-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ஆக இருந்த ஆண்டு வருமானம் 2022-23-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ஆக வருமானம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.