தமிழ்நாடு

100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படுமா? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

Published On 2024-05-17 13:41 GMT   |   Update On 2024-05-17 13:41 GMT
  • 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்.
  • மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்க முயற்சி.

தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை."

"தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது."

"இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது."

"எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள்/ வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை."

"வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது, அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News