ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனைக்கு வித்திட்ட நம் வீரர்- வீராங்கனையருக்கு வாழ்த்துகள்: அமைச்சர் உதயநிதி
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- தமிழக வீரர்கள் 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர்.
19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா இன்றுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.
ஆசிய வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடி சாதனை படைத்த வீரர்- வீராங்கனைகளுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட நம் வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்துகள்.
குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் - 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.
நம் வீரர்- வீராங்கனையரின் இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள்- இளம்பெண்களை விளையாட்டுத்துறையை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கச் செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.