குடிநீரில் கழிவுகளை கலந்து மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வன்கொடுமை- பாடசாலையில் பாதக செயல்
- நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை
- வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
விருதுநகர்:
அறிவியல், விஞ்ஞானம், விண்வெளி, நாகரீக வளர்ச்சி என்று நாடு முன்னேற்ற பாதையில் பயணித்தாலும், அவற்றையெல்லாம் படுபாதாளத்தில் தள்ளும் வகையிலான ஈனச்செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதுதான் வேதனைக்குரிய செயல்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் அருகேயுள்ள இறையூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மனித கழிவுகளை கலந்து முன்னேற்றம் அடையாத சமுதாயம் என்பது முத்திரை குத்தப்பட்டது.
உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., அறிவியல் பூர்வமான விசாரணை என்று நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மீண்டும் ஒருமுறை அதனை நினைத்து பார்க்கக்கூடாது என்றிருந்த நிலையில் அதே சாயலில் விருதுநகர் அருகே மற்றொரு செயல் நடந்துள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள சின்னமூப்பம் பட்டி கிராமத்தில் 200 பேர் கல்வி பயிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. முழுக்க, முழுக்க அந்த ஊரைச்சேர்ந்த மாணவ, மாணவிகளே இங்கு படிக்கிறார்கள்.
முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே இருந்த வசதியுடன் கூடுதலாக புதிய குடிநீர் தொட்டி ஒன்று தரைதளத்தில் அமைக்கப்பட்டது.
எந்தவித பாகுபாடும் இன்றி இதுவரை வயிறாற உணவுடன், தரமாமன கல்வியும் போதிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென பூதாகரமாக புகுந்த கயவர்கள் சிலர் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2-ந்தேதி பள்ளிக்கு வந்த மாணவர்கள் அந்த தொட்டியில் இருந்து குடித்த நீரில் துர்நாற்றம் வீசியது. அதனை திறந்து பார்த்தபோது சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. சுத்தம் செய்பவர்கள் பெரிதுபடுத்தாமல் கழுவி தண்ணீர் ஏற்றினர். 3-ந்தேதியும் இதே செயல் நடந்தது.
கிருஷ்ணஜெயந்தி விடுமுறைக்கு மறுநாளான நேற்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் தண்ணீரை பருகியபோது மீண்டும் அதில் சாணம் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்க வந்த மகளிர் சுய உதவிக்குழுவினரும் இதனை உறுதி செய்தனர்.
இதுபற்றி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
அப்போது அங்கு திரண்டு ஊர் பொதுமக்கள் கூறுகையில், இந்த பள்ளியில் உள்ளூர் மாணவர்களே படித்து வருகிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்ற அசுத்தமான செயலை செய்திருக்கமாட்டார்கள். பக்கத்து ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இங்கு விளையாட வருவார்கள் என்று தெரிவித்தனர். அவ்வாறு வரும் மாணவர்கள் யார், அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில், விடுமுறை நாளில் பள்ளிக்கு விளையாட வந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
சாதிய வன்கொடுமையை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.