தமிழ்நாடு
null

தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்க - கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Published On 2024-05-23 14:58 GMT   |   Update On 2024-05-23 15:02 GMT
  • தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
  • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் வழங்கப்படவில்லை.

காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம், கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் அடங்கிய முழு விவரங்களை அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News